Andril Mini Hall
அன்றில் என்பது சங்கத் தமிழர்களின் வாழ்வில் / மனதில் இடம் பெற்ற முதன்மையான பறவை இனமாகும். அன்றில் பறவைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க கால புலவர்களால் குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, அகநானூறு போன்ற அக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் பிரியாமல் வாழும். ஒன்று பிரிந்தால் மற்றொன்றும் ஏங்கி தவிக்கும் என்று நம்பினர்.
இன்று கருப்பு அரிவாள் மூக்கன் அல்லது ஐபிஸ் என்று அழைக்கப்படும் பறவையைத்தான் சங்க காலத்தில் அன்றில் என்று அழைத்திருக்கிறார்கள். அன்றில் என்ற சொல்லுக்கு ஒன்றை விட்டு மற்றொன்று பிரிந்திராது என்று பொருள். அன்றி+இல்=அன்றில். இந்த இயல்பினாலேயே நம் முன்னோர்கள் அன்றில் பறவைக்கு “அன்றில்” என்று பெயர் வைத்தனர். கோவில்கள் கட்டி வழிபாடு செய்யும் பழக்கம் உருவாகும் முன்னரே பழந்தமிழர்கள் தன் குலத்தை காக்கும் முயற்சியில் உயிர் துறந்தவர், தன் முன்னோர், சிறிய மலைக்குன்று, மரங்கள், இயற்கை அன்னை, மிக முக்கியமாக உண்மைக் காதலுக்கு உதாரணமான அன்றில் பறவை ஆகியவையே பழந்தமிழர்கள் புனிதமானதாக வணங்கத்தக்கவையாக கருதினர். அன்றில் பறவைகளின் மேன்மையான காதல் நெறியை கவனித்த பழந்தமிழர்கள் அன்றில் பறவைகள் கூடு கட்டி வாழும் ஒரு மரத்தை, அநேகமாக பனைமரத்தை, சுற்றியே தங்கள் வாழ்விடத்தை அமைத்தார்கள்.
அன்றில் பறவைகள் காதல் பறவைகளாய் வாழ்ந்ததை நம் மூத்த தமிழர்கள் தலைவன்- தலைவியின் நெருக்கமான அன்பின் அடையாளமாக உருவகப்படுத்திப் பார்த்து, பாடி போற்றினர். கடைபிடிக்க வேண்டிய இனிய இல்வாழ்வின் இலக்கணமாகவே எடுத்தியம்பினர். இன்றும் தன் குடும்ப நலனை முதன்மையாக கருதும் தமிழர் பண்பாடு தொடர்கிறது. அன்றில் பறவையின் அதி உன்னத வாழ்க்கை நெறியிலிருந்தே தமிழர் இனத்தின் இயல்புகளும் வளர்ந்து வந்துள்ளன.